செய்திகள்
136 அடியை தாண்டி கடல்போல் காட்சி அளிக்கும் பாபநாசம் அணை.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை

Published On 2021-11-06 10:14 GMT   |   Update On 2021-11-06 10:14 GMT
மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் இன்று சற்று தணிந்துள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. நேற்று நகர்ப்புறங்களில் வெயில் அடித்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வைப்பாறு பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,365 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் பாதுகாப்பு கருதி 136.50 அடி அளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையில் 139.37 அடி நீர்மட்டம் உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 10 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 84.70 அடியாக உள்ளது.

கடனாநதி அணை 83 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாகவும், கருப்பாநதி அணை 68.24 அடியாகவும் நிரம்பி உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் இன்று சற்று தணிந்துள்ளது.

அதேநேரம் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. சந்திப்பு கல்மண்டபத்தையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளம் தணிந்ததால் ஒரு சிலர் குளித்து செல்கின்றனர்.

பாசனத்திற்காக தாமிரபரணி ஆற்றின் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் முக்காணி தடுப்பணையை கடந்து ஏராளமான தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வைப்பாறு-34, எட்டயபுரம்- 24.4, ஸ்ரீவைகுண்டம்- 16, கடம்பூர்-9, கயத்தாறு-5, கீழஅரசடி-5, விளாத்திகுளம்- 4, காடல்குடி-2, கோவில்பட்டி-2, தூத்துக்குடி-1.4, திருச்செந்தூர்- 1, காயல்பட்டினம்-1.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மூலைக்கரைப்பட்டி- 6, அம்பை-4, சங்கரன் கோவில்- 3.2, சேர்வலாறு-1, சேரன்மகாதேவி- 1, கருப்பாநதி-1, சிவகிரி-1, நெல்லை-1.



Tags:    

Similar News