செய்திகள்
கலந்தாய்வு

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 13 சதவீதம் உயர்வு

Published On 2021-10-18 06:07 GMT   |   Update On 2021-10-18 06:07 GMT
மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பிரிவுகளில் மாணவர்களிடம் குறைந்த அளவிலேயே ஆர்வம் காணப்படுவதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
சென்னை:

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட்டு நேற்று நிறைவு பெற்றது.

4 சுற்றுகளிலும் சேர்த்து மொத்தம் 81 ஆயிரத்து 390 இடங்கள் நிரம்பி உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டில் காலியாக இருக்கும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பிவிட்டன.

மீதம் உள்ள இடங்களுக்கு துணை கலந்தாய்வு 20-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான முயற்சிகளை உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் செய்து வருகிறது.

பொறியியல் கல்லூரிகளில் கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 59 சதவீதம் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில் அதனை கடந்த காலங்களோடு ஒப்பிடும் போது 13 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

10 அரசு பொறியியல் கல்லூரிகளில் முழு சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. 113 கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. இது கடந்த ஆண்டில் 59 சதவீதமாக இருந்தது. 223 கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு மேலாக நிரம்பி இருக்கிறது. கடந்த ஆண்டு 139 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீத இடங்கள் நிரம்பி இருந்தன.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7ஆயிரத்து 324 பேர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறப்பு பிரிவில் 473 பேர் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

துணை கலந்தாய்வுக்கு பின்னர் பொறியியல் காலி இடங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., ஐ.டி. பாடப்பிரிவுகளை அதிகமாக தேர்வு செய்துள்ளனர்.

மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் பிரிவுகளில் மாணவர்களிடம் குறைந்த அளவிலேயே ஆர்வம் காணப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் ஒற்றை இலக்கு அளவிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

4 சுற்று கலந்தாய்வுக்கு பின்னர் 62 ஆயிரத்து 683 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான துணை கலந்தாய்வில் சுமார் 40 ஆயிரம் இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் பொறியியல் காலி இடங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News