செய்திகள்
மின்சார ரெயில்

சென்னை புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு

Published On 2021-09-13 04:44 GMT   |   Update On 2021-09-13 04:44 GMT
கணினி மயமாக்கப்படாத கவுண்டர்களில் ரிட்டர்ன் டிக்கெட் கொடுக்கப்படுவதில்லை. பயணிகள் டிக்கெட்டுக்கும், சீசன் டிக்கெட்டுக்கும் தனித்தனி கவுண்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

சென்னை:

சென்னை புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டதால் நீண்ட வரிசை காணப்படுகிறது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் ரெயில் நிலையம் முக்கிய பகுதியாக இருப்பதால் அங்கு மின்சார ரெயில் பயணிகள் தினமும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்து செல்கிறார்கள். எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளும் அங்கிருந்து மின்சார ரெயில்களை பயன்படுத்துகிறார்கள்.

தெற்கு ரெயில்வேயில் அதிக பயணிகள் டிக்கெட் விற்பனை செய்யும் மையமாக இது விளங்குகிறது. இங்கு உள்ள ஒரு சில டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டதால் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு 15 நிமிடம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் அதிக நேரம் காத்து நிற்பதால் பயணம் தடைபடுகிறது. திருவள்ளூர் உள்ளிட்ட சில புறநகர் ரெயில் நிலையங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் காத்து நிற்பதால் பல மின்சார ரெயில்களை தவறவிட வேண்டிய நிலை உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ரொக்க பணப்பரிமாற்றமே என்று கூறப்படுகிறது. டிக்கெட் எடுப்பவர்கள் ரொக்கமாக கொடுப்பதால் அதனை சரிபார்த்து டிக்கெட் கொடுப்பதற்கு தாமதமாகிறது. மெட்ரோ ரெயில் போல டிஜிட்டல் முறையில் டிக்கெட் வழங்கினால் தாமதம் ஏற்படாது. மேலும் கொரோனா பாதிப்பு காலத்தில் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி இல்லாமல் காத்து நிற்பது தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் காத்து இருக்கும் நிலைமை 3 மின்சார வழித் தடங்களிலும் காணப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘‘ஒரு சில டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. முழுமையான அளவு கவுண்டர்கள் திறக்கப்படாததால் பயணிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றால் நெரிசலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நெரிசல் இல்லாத நேரத்தில் கூட நீண்ட வரிசை காணப்படுகிறது. தாம்பரம் டிக்கெட் கவுண்டர் நவீனமயமாக்கப்பட்டதாகும். அங்கேயே இந்த நிலை ஏற்படுவது வேதனைக்குரிய வி‌ஷயமாகும்’’ என்றனர்.

இதுகுறித்து மின்சார ரெயில் பயணிகள் சங்க நிர்வாகி சடகோபன் கூறுகையில், ‘‘ஒரே இடத்தில் பயணிகள் டிக்கெட்டுடன் சீசன் டிக்கெட் மற்றும் பயண சலுகை டிக்கெட் வழங்கப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது.

கணினி மயமாக்கப்படாத கவுண்டர்களில் ரிட்டர்ன் டிக்கெட் கொடுக்கப்படுவதில்லை. பயணிகள் டிக்கெட்டுக்கும், சீசன் டிக்கெட்டுக்கும் தனித்தனி கவுண்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தெற்கு பகுதியில் உள்ள கவுண்டர் கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் செயல்படுவதில்லை. இது 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்படுகிறது.

இந்த ரெயில் நிலையத்துக்கு இந்த வழியாக அதிகளவில் பயணிகள் வருகிறார்கள். ஆனால் காலை 6 மணிக்குதான் கவுண்டர் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News