செய்திகள்
கோப்புப்படம்

மீன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிக்கன், மட்டன் விலை கடும் உயர்வு

Published On 2021-06-20 04:34 GMT   |   Update On 2021-06-20 04:34 GMT
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிக்கன் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மீன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடல் மீன்கள், ஏரி மீன்கள் குறைவான அளவில் தான் வருவதால் மீன் வாங்கி சாப்பிடும் பலர் சிக்கன், மட்டன் வாங்கத்தொடங்கி விட்டனர்.

இதன் காரணமாக இன்று சிக்கன், மட்டன் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கடைகளில் சிக்கன் கிலோ ரூ.240 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது. தோல் உரிக்காத கோழி கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்கப்பட்டது. உயிருடன் முழு கோழி ரூ. 150-க்கு கிடைக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிக்கன் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது.

இதுபற்றி பேபி புரோட்டின் கடை உரிமையாளர் அடையார் டி.துரை கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலமாக இருந்ததால் கோழிப்பண்ணையில் உற்பத்தியை குறைத்து விட்டனர்.

இந்த சூழலில் மீன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால் கோழிவிற்பனை அதிகமாகி விட்டது. ஆனால் குறைவான அளவே கடைகளுக்கு கோழிகள் தருவதால் சிக்கன் விலை அதிகரித்துள்ளது’ என்றார்

சிக்கனை போல் ஆட்டு இறைச்சியின் (மட்டன்) விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மட்டன் ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனையாகிறது.

தமிழகத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இறைச்சிக்காக ஆடுகள் கொண்டுவரப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக ஆடுகளை கொண்டுவருவது வெகுவாக குறைந்துள்ளது.

வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறைச்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News