செய்திகள்
கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை பார்வையிட்ட சபாநாயகர்

கலைவாணர் அரங்கத்தில் முன்னேற்பாடுகளை சபாநாயகர் பார்வையிட்டார்

Published On 2021-06-18 02:11 GMT   |   Update On 2021-06-18 02:11 GMT
தமிழகத்தின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தற்காலிக சட்டசபை அமைக்கப்பட்டுள்ளது. 21-ந் தேதி 16-வது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. எனவே அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் வரும் 21-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளன? என்பதையும், என்னென்ன பணிகள் செய்யப்பட வேண்டும்? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

மேலும், கலைவாணர் அரங்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சட்டசபைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக சென்னையில் சட்டமன்ற குடியிருப்பு, தலைமைச்செயலகம் போன்ற இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்திற்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும். அப்போதுதான் அனுமதி கிடைக்கும்.

தற்காலிக அளவில்தான் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபையிலும் போதுமான இடம் உள்ளது. ஓமந்தூரார் ஆஸ்பத்திரியை சட்டசபையாக மாற்றும் கேள்விகள் தற்போது வரை எழவில்லை என்றார்.
Tags:    

Similar News