செய்திகள்
உணவகம் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி-பேதி

Published On 2021-06-15 10:50 GMT   |   Update On 2021-06-15 10:50 GMT
பட்டுக்கோட்டை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சபிபுல்லா. இவர் தனது நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு 13 பேர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் அசைவ ஓட்டலில் 3 கிரில் சிக்கன் மற்றும் சவர்மா ஆகியவற்றை பார்சல் வாங்கி உள்ளனர். பின்னர் தங்களது இருப்பிடத்திற்கு வந்து கேரம் போர்டு விளையாடிவிட்டு இரவு உணவை சுமார் ஒன்பது மணிக்கு சாப்பிட்டு உள்ளனர்.

உணவு சாப்பிட்ட 13 பேருக்கும் திடீரென வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருந்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர். இது குறித்து சபிபுல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை அறிந்த பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அதே ஓட்டலில் பார்சல் வாங்கியவர்களும் தங்களுக்கு இதே பிரச்சினை இருந்ததாக கூறி ஓட்டலை முற்றுகையிட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புகாரைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் வரும் வரை ஓட்டல் முன்பு போலீஸ்துறை அதிகாரி ஒருவரை நிறுத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கடந்த ஒரு வார காலமாக அந்த அசைவ ஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்ட மேலும் சில பேருக்கு இதே பிரச்சினை இருந்துள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஓட்டலில் பார்சல் வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட முகமது யஹ்யா கூறும்போது, இந்த ஓட்டலில் முத்துப்பேட்டை பகுதியில் இருந்து தரம் அற்ற, கோழி கறிகளை விலை குறைவாக வாங்கி, அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக உணவு சாப்பிடுவார்கள். இதுபோன்ற மக்களின் உயிர் மீது அலட்சியம் காட்டும் உணவகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற விலை குறைவான இந்த கோழிகளை வாங்கி சமைக்கும் பட்டுக்கோட்டையின் இதுபோன்ற உணவங்களின் மீதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


Tags:    

Similar News