செய்திகள்
கரை ஒதுங்கிய மீனை பொதுமக்கள் எடுத்துச் செல்லும் காட்சி.

கடற்கரை பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய நன்னீர் மீன்கள்

Published On 2021-05-29 10:09 GMT   |   Update On 2021-05-29 10:09 GMT
குளம் மற்றும் ஆறுகளில் இருந்து கடலில் வருகின்ற நன்னீர் மீன்கள் கடல் நீரில் உயிர் வாழாது. கடலில் வந்து சில மணி நேரம் அல்லது ஒரு நாளில் அவை உயிரிழந்து விடும்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்களில் ஓடிய வெள்ளம் கன்னியாகுமரியை அடுத்த மணக்குடி காயலிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் கடலில் கலந்தன.

இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் ஏராளமான நன்னீர் மீன்கள் கரை ஒதுங்கின. அதனைப் பார்த்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வின்சென்ட் கூறியதாவது:-

இது போன்று கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆறு, குளம் மற்றும் அணைகளில் உள்ள மீன்கள் அடித்து வரப்பட்டு கடலில் வந்து அடைவது வழக்கம்.

இவ்வாறு குளம் மற்றும் ஆறுகளில் இருந்து கடலில் வருகின்ற நன்னீர் மீன்கள் கடல் நீரில் உயிர் வாழாது. கடலில் வந்து சில மணி நேரம் அல்லது ஒரு நாளில் அவை உயிரிழந்து விடும். அவ்வாறு வந்த மீன்கள்தான் இவ்வாறு கரை ஒதுங்குகின்றன.

சிறு மீன்களில் இருந்து சுமார் 4 கிலோ 5 கிலோ எடையுள்ள மீன்கள் வரை இவ்வாறு வந்து கரை ஒதுங்கின. இதில் பெரிய மீன்களை மட்டும் பொதுமக்கள் எடுத்துச் சென்று சமையலுக்கு பயன்படுத்தினர். குறிப்பாக கட்லா வகை மீன்கள் அதிகமாக வந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News