செய்திகள்
கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் தங்கி இருந்த அறை முன்பு சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் 3 பேர் தப்பி ஓட்டம்- சுகாதாரத்துறையினர் விசாரணை

Published On 2021-04-16 04:03 GMT   |   Update On 2021-04-16 04:03 GMT
அடிப்படை வசதிகள் இல்லை என கூறி கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலுக்கு கடந்த 12-ந் தேதி அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்தனர். இவர்களது மகன் அட்டுவம்பட்டியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் பயின்று வருகிறான். தனது மகனை பார்த்து விட்டு அங்குள்ள தனியார் பங்களாவில் இவர்கள் தங்கியுள்ளனர்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்ததால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் திடீரென ஆஸ்பத்திரியை விட்டு அவர்கள் வெளியேறி தங்கள் பங்களாவுக்கு வந்தனர். அவர்கள் இங்குள்ள ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் நாங்கள் சொந்த ஊருக்கே சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தனர். அவர்களிடம் சுகாதாரத்துறையினர் அவ்வாறு செல்ல முடியாது. கொரோனா தொற்று உள்ள சமயத்தில் பயணம் மேற்கொள்ளக் கூடாது. வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறினர்.

ஆனால் அவர்கள் தங்களுக்கு இந்த ஆஸ்பத்திரியில் எந்தவித வசதியும் இல்லை என கூறி சிகிச்சைக்கு வர மறுத்து விட்டனர். மேலும் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த தங்களது மகனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் 4 பேரும் கோவைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளப்போவதாக கூறி சென்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் தகரம் வைத்து கட்டுபடுத்தப்பட்ட பகுதி என அறிவித்துள்ளனர். மேலும் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து கொண்டு தெளிக்கப்பட்டது. 

இது குறித்து கொடைக்கானல் தலைமை வட்டார மருத்துவர் அரவிந்தன் தெரிவிக்கையில், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு தங்களது மகனை பார்க்க வந்த போது 3 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது அந்த மாணவனுக்கும் தொற்று கண்டறியப்பட்டதால் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கூறினோம். ஆனால் தங்கள் மகளை மட்டும் பங்களாவில் தனிமைபடுத்தி வைத்து விட்டு அந்த தம்பதி தங்கள் மகனுடன் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கொடைக்கானலில் கொரோனா நோயாளிகள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News