செய்திகள்
கோப்புபடம்

வாக்குச்சாவடிகளாக செயல்படுவதால் விடுமுறை - பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 8-ந்தேதி வகுப்பு தொடக்கம்

Published On 2021-04-05 07:48 GMT   |   Update On 2021-04-05 07:48 GMT
பிளஸ்-2 மாணவர்களுக்கு மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர்.

9, 10, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பிளஸ்-2 மாணவர்களுக்கு மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதில் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வாக்குச்சவாடி மையங்களாக செயல்படுகின்றன.

இதனால் வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வாக்குச்சாவடிகளாக செயல்படுகின்ற பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

குறைவான அளவு மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் வகுப்பு நடத்துவதில் பிரச்சினை இல்லை.

ஆனால் அதிக அளவிலான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் 7-ந் தேதி வரை பள்ளிகளுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதால் மறுநாள் (7-ந் தேதி) கிருமிநாசினி மூலம் பள்ளியை சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

தொற்று பரவல் தடுக்க சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 7-ந் தேதி வரை வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் 8-ந் தேதி முதல் மீண்டும் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குகிறது.

இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-

வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவது சிரமமாக இருப்பதால் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த மறுநாள் வகுப்புகளை சுத்தம் செய்து 8-ந்தேதி முதல் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் அதனால் பள்ளியை சுத்தம் செய்வதற்காக மேலும் ஒருநாள் அவகாசம் எடுத்து கொள்வோம் என்றார்.

Tags:    

Similar News