செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்குகள் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-09 01:55 GMT   |   Update On 2021-03-09 01:55 GMT
முதல்-அமைச்சர், அமைச்சர்களை விமர்சனம் செய்ததற்காக மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர்களையும் பற்றி விமர்சனம் செய்து பேசினார். இதற்காக அவர் மீது தனித்தனியாக 6 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாம் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள், நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் பி.குமரேசன் ஆஜராகி, ‘அரசியல் ரீதியான விமர்சனத்தைத்தான் ஸ்டாலின் முன்வைத்தார். அதற்காக அவர் மீது வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த 6 வழக்குகளும் சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் இன்று (நேற்று) காலையில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகள் எல்லாம் நாளை (இன்று) முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் மீதான 5 அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்லத்திருமண விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியதற்காக மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மீது பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜோதிமணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல, தமிழக அமைச்சர்களை விமர்சித்து பேசியதாக அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ‘அமைச்சர்கள் மீதான கருத்து பொதுப்படையாகத்தான் உள்ளதே தவிர, அரசு பணிகளை செய்வதற்கு இடையூறாக இல்லை’ என்று கூறினார். பின்னர், டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News