செய்திகள்
விஜயலட்சுமி - நடேசன்

பரமத்தி பகுதியில் வாகனம் மோதி கணவன்-மனைவி பலி

Published On 2021-02-20 05:23 GMT   |   Update On 2021-02-20 05:23 GMT
பரமத்தி பகுதியில் வாகனம் மோதி கணவன்-மனைவி பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 49). விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (43). இவர் எம்.எஸ்.சி. பி.எட். படித்துள்ளார். தற்போது இருவரும் பரமத்தி அசோசியே‌ஷன் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜயலட்சுமி, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வை எழுதி ஆசிரியர் பணியில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். மேலும், மதுரையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவதற்கு முடிவு செய்தார்.

இதற்காக விஜயலட்சுமியை இன்று காலையில் மதுரைக்கு பஸ்சில் ஏற்றி விட வேண்டி, நடேசன் மோட்டார்சைக்கிளில் அவரை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் டோல்கேட் பஸ் நிறுத்தத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பரமத்தி திருமணிமுத்தாறு ஆற்றுபாலம் அருகே ஓவியம்பாளைம் பிரிவு ரோட்டில் நடேசன் சென்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனம் திடீரென அவரது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நடேசன், விஜயலட்சுமி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த டிரைவர், அவர்களை காப்பாற்ற முன்வராமல் வாகனத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து, நடேசன்-விஜயலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே தம்பதி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டிரைவரையும், வாகனத்தையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பலியான நடேசன்- விஜயலட்சுமி தம்பதிக்கு கார்த்திகேயன் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். லாவண்யா ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டும், கார்த்திகேயன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டும் படித்து வருகிறார்கள். பெற்றோர் விபத்தில் உயரிழந்த சம்பவத்தை கேட்டு அவர்கள் கதறி அழுதனர்.


Tags:    

Similar News