செய்திகள்
ரெயில்

மதுரை கோட்டத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க முடிவு

Published On 2021-01-31 04:55 GMT   |   Update On 2021-01-31 04:55 GMT
நெல்லை, திருச்செந்தூர் உள்பட மதுரை கோட்டத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

கொரோனா ஊரடங்கால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. சரக்கு ரெயில்கள் மற்றும் பார்சல் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 70 சதவீத ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை ரெயில்வே வாரியம் அளித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி-ஹவுரா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படவுள்ளது. நாகர்கோவில்-தாம்பரம் இடையே தினசரி அந்தியோதயா ரெயில் இயக்கப்படுகிறது.

திருச்செந்தூர்-பாலக்காடு தினசரி ரெயில், நெல்லை-ஈரோடு தினசரி ரெயில் ஆகியன இயக்கப்பட உள்ளன. இவையனைத்தும் சிறப்பு ரெயில்களாக விரைவில் இயக்கப்படும் என தெரிகிறது. இதில் நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில் மயிலாடுதுறை இணைப்பு ரெயிலாக இயக்கப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும், திருச்செந்தூர்-பாலக்காடு மற்றும் நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில்கள் 200 கி.மீ. தூரத்துக்கு மேல் இயக்கப்படுவதால் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுமா என்பதும் தெரியவில்லை. எப்படியிருப்பினும் ரெயில்சேவை தொடங்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News