செய்திகள்
உயிரிழந்த கோவில் காளை

கொட்டாம்பட்டி அருகே கோவில் காளை இறப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published On 2020-12-05 01:24 GMT   |   Update On 2020-12-05 01:24 GMT
கொட்டாம்பட்டி அருகே உடல்நலக்குறைவால் கோவில் காளை பரிதாபமாக உயிரிழந்தது. கிராம பெண்கள் ஒன்று திரண்டு கும்மியடித்து வழிபட்டனர்.
கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள காரியேந்தல்பட்டியில் கருப்புசாமி கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தனர். கோவில் காளைக்கு செல்லமாக கருப்பு என பெயரிட்டு அழைத்து வந்தனர். இந்த காளையானது புகழ் பெற்ற அவனியாபுரம், சிராவயல் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடி பெருமை சேர்த்து வந்தது. 

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் இந்த கோவில் காளை நேற்று உயிரிழந்தது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் கோவில் காளைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் வெளியூர்களில் தங்கியுள்ள கிராமத்தினருக்கு இந்த தகவல் பரவியதால் கோவில் காளைக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் மாலை, துண்டு, வேட்டியுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். கிராம பெண்கள் ஒன்று திரண்டு கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் மேளதாளம், வாணவேடிக்கையுடன் கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து சென்று காளையை அடக்கம் செய்தனர்.
Tags:    

Similar News