செய்திகள்
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2020-11-07 02:58 GMT   |   Update On 2020-11-07 02:58 GMT
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் புதிய, பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் முதல் போகத்தில் நெல் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் 2-ம் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்து, மலர்தூவி வரவேற்றார்.

பின்னர் அவர் பேசும்போது, விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் நெல் நடவு செய்வதோடு, நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றார். இதில் ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஆனைமலை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுந்தரம், கார்த்திக் அப்புசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி, உதவி பொறியாளர் மாணிக்கவேல், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், கட்சி நிர்வாகிகள் மகாலிங்கம், கோட்டூர் பாலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 5 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 2-ம் போக சாகுபடிக்கு இன்று (நேற்று) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முடிய 160 நாட்களுக்கு 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News