செய்திகள்
கேஎஸ் அழகிரி

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் அழிந்து விடும்- கே.எஸ்.அழகிரி

Published On 2020-10-12 01:40 GMT   |   Update On 2020-10-12 01:40 GMT
மத்திய அரசால் பொதுத்துறை நிறுவனங்கள் அழிந்ததுபோன்று, புதிய வேளாண் சட்டங்களால் விவசாயமும் அழிந்துவிடும் என்று திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
திருவண்ணாமலை:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பாக விவசாயிகள் சங்கமம் என்ற பெயரில் திருவண்ணாமலையில் நேற்று மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சிரிவெல்லா பிரசாத் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்களானது எவ்வாறு இந்தியாவில் 5000 ஆண்டு கால விவசாயத்தை பாதிக்கும் என்பது தான். இந்த சட்டத்தின் மூலம் விவசாயம் வளர்ச்சி அடையும் என்று மோடி கூறுகிறார். புதிய சட்டங்களை கொண்டு விவசாயிகள் லாபம் அடைவார்கள் என்றும் அவர் கூறினார். அது உண்மையாகாது.

இந்தியா நெல் மற்றும் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. பால் உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை இன்று நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம். 130 கோடி மக்களுக்கு இன்று நாம் உணவு வழங்குகிறோம். உபரி உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கும் வழங்குகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை மோடி அரசால் செய்ய முடியவில்லை.

புதிய வேளாண் சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து, ஒப்பந்த முறையில் விலை நிர்ணயம் செய்யும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஒருவர் இடைத்தரகர்களை ஒழிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், காங்கிரஸ் இடைத்தரகர்களை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். அது தவறான கருத்து. மார்க்கெட் கமிட்டியில் நாம் ஒரு விலையை நிர்ணயம் செய்து பொருட்களை விற்று விடலாம். ஆனால் இந்த புதிய சட்டங்கள் மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட அனைத்தையும் அழித்து விடுகிறது.

எதிர்க்கட்சி முதல்வர்கள் அனைவரும் விவசாய சட்டத்தை எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வர் மட்டும் அதற்கு ஆதரவு அளிக்கிறார். மடியில் கனம் இருப்பதால் வழியில் அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது. தமிழக அரசின் உரிமைகளை அ.தி.மு.க. அரசு இழந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 4 ஜி சேவையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது மூலமாக மோடி அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழித்து விட்டது.

நமது நாட்டில் மத்திய அரசால் பொதுத்துறை நிறுவனங்கள் அழிந்தது மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களும் ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலைதான் விவசாயத்திற்கும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News