செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மின்வாரிய அதிகாரி தற்கொலை

Published On 2020-10-09 08:52 GMT   |   Update On 2020-10-09 08:52 GMT
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற மின்வாரிய அதிகாரி தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகர் லிங்கபாய் தெருவை சேர்ந்தவர் சந்திரவாசன் (வயது44). இவர் விண்ணவனூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சந்திரவாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் 3-வது தளத்தில் கொரோனா வார்டில் உள்ள ஒரு அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வார்டில் இருந்த சந்தரவாசனை திடீரென காணவில்லை. அவரை மருத்துவமனை ஊழியர்கள் தேடி பார்த்தனர்.

அப்போது அவர் அங்குள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முன்னதாக அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சந்திரவாசன் சிகிச்சை பெற்று வந்த இடத்தில் ஒருகடிதம் எழுதி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. அதில் சந்திரவாசன் தனக்கு தீராத வயிற்று வலி இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும், இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும், மனைவி மற்றும் மகள் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரவாசன் தற்கொலை செய்ததற்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சத்தியவாசன் குடும்பத்தினருடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் கொரோனா தொற்று ஏற்பட்ட அச்சம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News