செய்திகள்
பொன்.ராதாகிருஷ்ணன்

வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2020-09-30 11:28 GMT   |   Update On 2020-09-30 11:28 GMT
வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜனதா கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொது செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், பிரபு, தெற்கு மாவட்ட பார்வையாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தொழிலாளர் பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் மாணிக்கம், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், ஒன்றிய பொது செயலாளர் முத்துகுமார், நகர தலைவர் சரவணன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பிரதமர் மோடியின் சாதனைகள் மக்கள் மத்தியில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் மோடியின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனிக்க ஆரம்பித்து உள்ளனர். எதிர்காலத்தில் உலகை வென்ற இந்தியா என்ற பெயரை பெறக்கூடிய அளவிற்கு மோடியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

வேளாண் மசோதாக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம். விவசாயிகள் விளைய வைத்து செலவுக்கு மேலாக லாபம் ஈட்டக்கூடிய அளவுக்கு அவர்கள், விளைய வைத்த பொருளை விற்று ஆகவேண்டும். இடைத்தரகர்கள் மத்தியில் சிக்கி விவசாயிகள் சீரழியக் கூடாது. விவசாயிகள் கஷ்டப்பட்டு பொருட்களை விளைய வைப்பார்கள். ஆனால் சந்தைக்கு போகும் போது அந்த விலை கிடைக்காது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவால் எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இன்று அரசியலுக்காக பலபேர் பலவிதமாக பேசி வருகின்றனர். விவசாயிகள் மத்தியில் வேளாண் மசோதா குறித்த விவரங்கள் எல்லாம் எடுத்துச் சொல்வோம். அப்போது நிச்சயமாக அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
Tags:    

Similar News