செய்திகள்
போலீசார் விசாரணை

நாங்குநேரி இரட்டைக்கொலையில் ஒருவர் சிக்கினார்

Published On 2020-09-28 09:23 GMT   |   Update On 2020-09-28 09:23 GMT
நாங்குநேரியில் நடந்த இரட்டைக்கொலையில் ஒருவர் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45).

அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி சாந்தி (40). உறவினர்களான இவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் 12 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த இரட்டைக்கொலை குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காதல் திருமண விவகாரத்தில் ஏற்கனவே இரு தரப்பில் இருந்தும் 3 பேர் கொலை செய்யப்பட்டதும், அதற்கு பழிக்குப்பழியாக தற்போது 2 பெண்கள் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் செல்லத்துரை, சிவசுப்பு, பெருமாள் மகன்கள் முருகன், செல்வம், மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த மாடசாமி, தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன், முத்துப்பாண்டி, முத்து உள்ளிட்ட 12 பேர் மீது கொலை, வெடிகுண்டு வீசுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவான 12 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக, நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரசா மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சென்றும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது செல்போன் அழைப்புகளையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் செல்லத்துரையின் உறவினர் நம்பிராஜன் என்பவர் கல்லிடைக்குறிச்சி காட்டுப்பகுதியில் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவரது கூட்டாளிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் மற்ற கொலையாளிகள் இன்று கோர்ட்டில் சரண் அடையலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் சாதாரண உடைகளில் கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

Similar News