செய்திகள்
குடகனாற்றில் உள்ள தரைமட்ட பாலத்தை படத்தில் காணலாம்.

குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்டவேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-09-27 13:45 GMT   |   Update On 2020-09-27 13:45 GMT
அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ளது வெஞ்சமாங்கூடலூர். இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இக்கோவிலில் மாசிமக தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி கல்யாண விகிர்தீஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலுக்கு மற்றும் வெஞ்சமாங்கூடலூர் செல்ல வேண்டுமானால் கோவில் அருகில் உள்ள குடகனாற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ஆற்றைக் கடக்க தரைமட்ட பாலம் வழியாகச்செல்ல வேண்டும். இந்த ஆற்றில் மழை காலங்களில் தண்ணீர் வரும்போது சிறிய தரைமட்ட பாலத்தில் தண்ணீர் வழிந்தோடும்.

அந்த நேரத்தில் பொதுமக்கள் வெஞ்சமாங்கூடலூர் மற்றும் கோவிலுக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் வெஞ்சமாங்கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் விவசாய பொருட்களை விற்பனைக்கு, அரவக்குறிச்சி மற்றும் கரூர் எடுத்துச் செல்ல வேண்டுமானால் இந்த சிறிய தரைமட்டப் பாலம் வழியாக தான் சொல்ல வேண்டியுள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News