செய்திகள்
கடத்தல்

கோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியை காரில் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2020-09-27 03:36 GMT   |   Update On 2020-09-27 03:36 GMT
கோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியை காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள பழைய அப்பநேரியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவரும் ஒரு கிராமத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வருபவரும் பழகி வந்துள்ளனர். இதனை அறிந்த பேராசிரியையின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளார். அதன் பின்னர் அவர், பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும், செல்போனையும் அணைத்து வைத்து விட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவில்பட்டி அருகே பேராசிரியை நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த பாலமுருகன், அவரை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பேராசிரியையின் பெற்றோர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திர வடிவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, தலைமை காவலர் முருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தினர்.

இதில், அந்த பேராசிரியையின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், கொடைக்கானலில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று பாலமுருகனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த பேராசிரியை பத்திரமாக மீட்கப்பட்டு கோவில்பட்டிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக அதே ஊரைச் சேர்ந்த ரூமணிக் விஜய் (27) என்பவரும் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News