செய்திகள்
கோப்புப்படம்

வேட்டவலம் அருகே செல்போனுக்காக கடத்தல் நாடகமாடிய பிளஸ்-2 மாணவன்

Published On 2020-09-24 08:12 GMT   |   Update On 2020-09-24 08:12 GMT
வேட்டவலம் அருகே செல்போனுக்காக பிளஸ்-2 மாணவன் கடத்தல் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேட்டவலம்:

வேட்டவலம் அடுத்த கல்லாவி சொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். கூலித்தொழிலாளி. இவரது மகன் பரத்.

வேட்டவலம் அரசு பள்ளியில் பரத் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். புதியதாக செல்போன் வாங்கிதர கோரி தந்தையிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஆனால் கூலி வேலை செய்வதால் தற்போது செல்போன் வாங்கி தர முடியாத சூழ்நிலையை மகனிடம் தந்தை விளக்கினார்.

ஆனால் தந்தையின் சூழ்நிலையை பரத் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற பரத் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் பரத்தின் உறவினர்கள் செல்போனுக்கு வாட்ஸ்- அப்பில் பரத் கை, கால், வாயை கட்டி கீழே விழுந்து கிடப்பது போல் போட்டோ வந்தது.

மேலும் அதில் நாங்கள் பரத்தை கடத்தி வைத்துள்ளோம் ரூ.5 லட்சம் கொடுத்தால் பரத்தை விடுவிப்பதாகவும் இதுகுறித்து போலீசுக்கு சென்றால் பரத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து இருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பரத்தின் உறவினர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

இதுகுறித்து ரத்தினவேல் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிவு செய்து பரத்தின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தார். அதில் பரத்தின் செல்போன் சொரத்தூர் மலைக்கோவில் அருகில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் வேட்டவலம் அரசு பள்ளி அருகே மாணவன் பரத் தனியாக நின்று கொண்டிருந்தார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அப்போது சிலர் கண்ணைக் கட்டி கடத்தி சென்றதாக பரத் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர் அப்போது தனது தந்தை புதிய செல்போன் வாங்கித் தராததால் தனது சித்தி மகனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தான்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது தனது சித்தி மகனுடன் வேட்டவலம் மலைக்கோவில் பகுதிக்கு சென்றோம். அங்கு என்னுடைய கை, கால்களை கட்டி செல்போனில் போட்டோ எடுத்து உறவினர்கள் வாட்ஸ்அப்-க்கு அவர் அனுப்பினார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி சித்தி மகன் எங்களது வீட்டிற்கு வந்தார். போலீசார் என்னை தேடும் போது அவர்களுடன் அவரும் என்னை தேடுவது போல் நடித்து அடிக்கடி அங்கு நிகழும் நிகழ்வுகளை எனக்கு செல்போனில் தெரிவித்தார்.

போலீசார் என்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் நானாகவே வீட்டிற்கு திரும்பி வந்த போது போலீசார் என்னை பிடித்து வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News