செய்திகள்
போலீசார் விசாரணை

குளச்சல் பஸ் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்- போலீசார் விசாரணை

Published On 2020-09-21 08:02 GMT   |   Update On 2020-09-21 08:02 GMT
பஸ் நிலையத்தில் பெற்றோருடன் படுத்து தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகரை சேர்ந்தவர் முத்துராஜா(வயது30). இவரது மனைவி புஷ்பவல்லி. இவர்களுக்கு துர்க்காவல்லி என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

நரிக்குறவர் இனத்தை சேர்ந்த முத்துராஜா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களது குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குளச்சலுக்கு வந்தனர். பஸ் நிலைய பகுதியில் தங்கியிருந்த அவர்கள், இரவில் அங்கேயே படுத்து தூங்கி வந்தனர்.

நேற்று இரவும் பஸ் நிலைய பகுதியில் கணவன்-மனைவி இருவரும் குழந்தையுடன் படுத்து தூங்கினர். நள்ளிரவில் திடீரென விழித்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர்.

ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. பெற்றோருடன் படுத்து துங்கிய குழந்தையை நள்ளிரவு நேரத்தில் யாரோ கடத்தி சென்று விட்டனர். இது குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் முத்துராஜா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஸ் சாஸ்திரி குளச்சல் பஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். குழந்தையை கடத்திய நபர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? எங்கு கொண்டு சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

நள்ளிரவு நேரம் என்பதால் பஸ் நிலைய பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் அந்த குழந்தை கடத்தப்படுவதை யாரும் பார்க்கவில்லை. மேலும் பஸ் நிலைய பகுதியில் ஆதரவற்ற சிலர் படுத்திருந்தனர். அவர்களிடம் இரவு நேரத்தில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் திரிந்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் மர்ம நபர்கள் நடமாட்டம் மற்றும் குழந்தை கடத்தலை பார்க்கவில்லை என்று கூறி விட்டனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதிலும் யாருடைய உருவமும் சிக்கவில்லை. இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஸ் நிலையத்தில் பெற்றோருடன் படுத்து தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News