செய்திகள்
கோமுகி அணையில் இருந்து பழைய பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் வெளியேற்றம்

கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றம்- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-09-19 10:14 GMT   |   Update On 2020-09-19 10:14 GMT
கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கச்சிராயப்பாளையம்:

கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகிஅணை உள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் போதிய மழை இல்லாததால் அணையின் நீர் மட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. அதேபோல் கல்வராயன்மலை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொட்டியம், கடல்படை ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால் 37 அடியாக இருந்த கோமுகி அணையின் நீர் மட்டம் 2 வாரத்தில் கிடு கிடு என உயர்ந்து மொத்த கொள்ளளவான 44 அடியை எட்டியது.

இதையடுத்து பாசனத்துக்காகவும், ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கோமுகி அணையில் இருந்து பழைய பாசன வாய்க்கால் வழியாக வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து காணப்படுகிறது. வடக்கநந்தல் பகுதி மற்றும் மாத்தூர் ஏரிகள் நிரம்பி வருகின்றன. கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், வடக்கநந்தல், செம்பட்டாகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கச்சிராயப்பாளையம், செம்படாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News