செய்திகள்
குழந்தை திருமணம்

ஊரடங்கை காரணம் காட்டி கிராமங்களில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

Published On 2020-09-17 07:31 GMT   |   Update On 2020-09-17 07:31 GMT
கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஊரடங்கில் 33 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மதுரை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த ஊரடங்கை பயன்படுத்தி கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் மதுரை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் சத்தமில்லாமல் அரங்கேறி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்ட கலெக்டராக வினய் பொறுப்பேற்ற பின்னர் குழந்தை பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாவட்டம் முழுவதும் குழந்தை திருமணங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் நடைபெற இருந்த 33 குழந்தை திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நல அலுவலரும், குழந்தை திருமண தடுப்பு அலுவலருமான சாந்தி கூறும்போது, மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 7, மே மாதத்தில் 4, ஜூன் மாதத்தில் 5, ஜூலை மாதத்தில் , ஆகஸ்டு மாதத்தில் 9 என ஊரடங்கு காலத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் குழந்தை திருமணங்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் அதுகுறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

குழந்தை திருமணம் நடைபெற்ற பின்னர் அந்த குழந்தைக்கு முதலில் படிப்பு பாதிக்கப்படும். திருமணத்திற்கு பின்னர், குழந்தை பிறந்த பின்பு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்படும். 18 வயது நிரம்பாத ஒருவருக்கு திருமணம் செய்யும்போது அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும் பல்வேறு பிரச்சினை ஏற்படும். இதனால் தற்கொலை சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், சமூக மாற்றத்தால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News