செய்திகள்
கொள்ளை

மந்தவெளியில் போலீஸ் சீருடையில் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பணம் பறிப்பு

Published On 2020-08-30 06:35 GMT   |   Update On 2020-08-30 06:35 GMT
மந்தவெளியில் போலீஸ் சீருடையில் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பணத்தை பறித்து சென்ற மோசடி வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:

ராயப்பேட்டையை சேர்ந்தவர் முகமது வாசிம். முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

மந்தவெளி ரெயில் நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று விட்டு அவர் திரும்பிக் கொண்டிருந்தார்.

சிருங்கேரிமடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 பேர் காக்கிச்சீருடையில் வழி மறித்தனர். போலீஸ் என்று கூறி முகமது வாசிமிடம் விசாரணை நடத்தினர்.

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனால் பயந்துபோன முகமது வாசிம், தன்னிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணம் இருப்பதாக தெரிவித்தார்.

இதன்பிறகு போலீஸ் என்று கூறிய இருவரும் முகமது வாசிமிடம் இருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை பறித்துக்கொண்டு காரில் ஏறி சென்றுள்ளனர்.

மந்தவெளி காவல் நிலையத்தில் வந்து உரிய கணக்கு காட்டி பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து முகமது வாசிம் மந்தவெளி போலீஸ் நிலையத்தை தேடி அலைந்துள்ளார். மந்தைவெளி பெயரில் சென்னையில் போலீஸ் நிலையமே கிடையாது என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் முகமது வாசிம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப்பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் என்று கூறி துணிகர கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மோசடி வாலிபர்களை பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News