செய்திகள்
டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

திருச்சியில் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை- விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணிக்க உத்தரவு

Published On 2020-08-21 07:25 GMT   |   Update On 2020-08-21 07:25 GMT
9 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் திருச்சியில் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை நடத்தினார்.
திருச்சி:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் சென்றார். அங்கு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்ட அவர், திருச்சிக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மத்திய மண்டல ஐ.ஜி.ஜெயராமன், டி.ஐ.ஜி.ஆனி விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பிடிவாரண்டு கைதிகளை பிடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

நாளை (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா ஆகும். தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது. ஆகவே, வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் கொண்டாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தடையை மீறி எந்த அமைப்பினராவது பொது இடங்களில் சிலைகளை வைக்கிறார்களா? என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு திரிபாதி அறிவுரை கூறினார். மாவட்டங்களில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News