செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்கத்தை படத்தில் காணலாம்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2020-08-13 12:04 GMT   |   Update On 2020-08-13 12:04 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:

கடந்த 8-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு இரவு 7.40 மணிக்கு வந்தது. அதில் வந்த 177 பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் வந்த 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், சிவகங்கையை சேர்ந்த பாஸ்கர், ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் நூருல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜா, மானாமதுரையை சேர்ந்த உதயன் ஆகியோர் என்பதும் அவர்கள் நகை வடிவிலும், பசை வடிவிலும் தங்கத்தை தங்கள் உடலில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரிடம் இருந்தும் மொத்தம் ஒரு கிலோ 773 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பாஸ்கர், நூருல் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், மற்ற 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பசை வடிவில் இருந்ததால், அதை திருச்சி பெரியகடை வீதியில் உள்ள 2 பொற்கொல்லர்களிடம் கொடுத்து தங்கம் பிரித்து எடுத்து மதிப்பீடு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 24 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளில் உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வரும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் இதுபோன்று தங்கம் கடத்துவது மிகவும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News