செய்திகள்
முக கவசம்

ஆலைகளில் தொழிலாளர்கள் பயன்படுத்திய முக கவசங்களை அழிப்பது எப்படி?- மூத்த விஞ்ஞானி விளக்கம்

Published On 2020-08-13 08:18 GMT   |   Update On 2020-08-13 08:18 GMT
ஆலைகளில் தொழிலாளர்கள் பயன்படுத்திய முக கவசங்களை அழிப்பது எப்படி? என்பது குறித்து பாபா நிறுவன மூத்த விஞ்ஞானி டாக்டர் டேனியல் செல்லப்பா கூறினார்.
விருதுநகர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், மற்ற நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரசை விட மாறுபட்டதாகும். மற்ற வைரஸ்கள் கொசு, எலி உள்ளிட்ட உயிரினங்கள் மூலம் பரவக்கூடியது. ஆனால் கொரோனா வைரஸ் நாம் அனுமதித்தால்தான் நமக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

வீட்டு வாசலில் நிற்கும் கொரோனா வைரசை தொடுதல் மூலமும், நம் பிற நடவடிக்கைகள் மூலமும் மூக்கு, வாய் வழியாக நம்முள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக மக்கள் பின்பற்ற வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக கூறப்பட்டாலும் அதன் பின்னர் மாவட்ட மக்கள் விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காததால்தான் நோய் பாதிப்பில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமப்பகுதிகளில் கிராம மக்கள் தனிமைப்படுத்தலின் அவசியத்தை உணராமல் சுதந்திரமாக சுற்றி திரிந்ததால்தான் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு பணிக்கு அனுமதிப்பதற்கு முன்னர் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை நடத்தி காய்ச்சல் உள்ளவர்களை பணிக்கு அனுமதிக்க கூடாது. பயோமெட்ரிக் முறைப்படி தொடுதிரை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். தற்போது தொடுதிரை இல்லாத பயோமெட்ரிக் வருகை பதிவேடு சாதனங்களும் வந்துள்ள நிலையில் அதனை பயன்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் குடிநீர் வசதி செய்வதை தவிர்த்து அவர்கள் வீடுகளில் இருந்து வரும்போதே பாதுகாப்பான முறையில் குடிநீரை கொண்டுவர அறிவுறுத்த வேண்டும். தொழில்நிறுவனங்களில் சமூக இடைவெளியோடு பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மீறி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் அவர்கள் பணி செய்வதை தவிர்த்து தனிமைப்படுத்த வேண்டும். தொழில்நிறுவனங்களில் எந்திரங்கள், கதவுகள் போன்ற பகுதிகளை கிருமிநாசினி தெளித்து தினசரி தூய்மைப்படுத்த வேண்டும். தொழில் நிறுவனம் நடத்துவோர் தொழில் நிறுவனம் அமைந்துள்ள பகுதியினையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

முக கவசம் அணிந்துள்ளவர்கள் முக கவசத்தை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கண், மூக்கு ஆகிய பகுதிகளை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கண்ட இடங்களில் வீசி எறிந்து விடாமல் தேசிய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி மருத்துவ கழிவுகளை போன்று பாதுகாப்பான இடங்களில் போடுவதற்கு தொழில் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து அதனை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் கொரோனா நோய் குறைந்துள்ளதை போன்று விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா நோய் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால் அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனா நோய் கட்டுக்குள் வரும் என்பது மட்டும் உறுதி.

இம்மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இறப்பு சதவீதத்தை குறைக்கவும், மத்திய அரசு அறிவுறுத்தியபடி மாநில சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தளர்வுகள் இல்லாத ஊரடங்கின்போது மாவட்ட மக்கள் முற்றிலுமாக வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்ப்பதன் மூலம் நோய்பரவலை பெரும் அளவில் குறைக்க வாய்ப்பு ஏற்படும். இதில் இந்த மாவட்ட மக்கள் அலட்சியம் காட்டினால் கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News