செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

வாணியம்பாடி அருகே பலத்த மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

Published On 2020-07-11 10:48 GMT   |   Update On 2020-07-11 10:48 GMT
வாணியம்பாடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார். உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை ஊராட்சி புருஷோத்தமகுப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 45). இவரது கணவர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து போனார். இதனால், அய்யம்மாள் மற்றும் அவரது மகன் அந்தோணிராஜ் என்ற ராகுல்காந்தி (13) ஆகியோர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவு முழுவதும் தொடர்ந்த பெய்த பலத்த மழையால் குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பிணத்தை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், அய்யம்மாள் சுப்பிரமணி என்ற பெயரில் 2017-2018-ம் ஆண்டில் தமிழக அரசு வீடு கட்டப்பட்டதாக வங்கி கணக்கில் பண பரிமாற்றம் செய்து அப்போது இருந்த கிராம ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு வீடு கட்டி கொடுத்து இருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, பிணத்தை எடுக்க அனுமதி அளித்தனர். அதன்பின்பு வாணியம்பாடி தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News