செய்திகள்
ரேசன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2020-07-10 13:00 GMT   |   Update On 2020-07-10 13:23 GMT
கோட்டூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒரு சில குடும்பத்திற்கு மாதம் 30 கிலோவுக்கு மேல் அரிசி வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோட்டூரில் இருந்து கேரளாவுக்கு சிலர் ரேசன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அங்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் டிரைவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தது மீனாட்சிபுரத்தை சேர்ந்த டிரைவர் பூபதிராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது. வாகனத்தில் 32 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது.

மேலும் கோட்டூர் பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி, மூட்டைகளில் கட்டி சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்றபோது அவர் போலீசில் சிக்கி கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரேசன் அரிசி, சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றையும், பிடிபட்ட பூபதிராஜையும் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News