செய்திகள்
வெளியூர்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு பஸ்சில் அழைத்து சென்றனர்

வெளிமாநிலத்தில் இருந்து குமரிக்கு வந்தவர்கள் திடீர் போராட்டம்

Published On 2020-07-06 09:26 GMT   |   Update On 2020-07-06 09:26 GMT
களியக்காவிளையில், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்ல கட்டணம் வசூல் செய்ததால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை:

உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதையொட்டி வெளிநாடு, வெளி மாநிலங்களில் தங்கி இருந்து வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் தமிழர்கள் விமானம், ரெயில் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலம் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

நேற்று முன்தினம் இரவு துபாய், மஸ்கட், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள் பலர் டெல்லி- திருவனந்தபுரம் ரெயில் மூலம் திருவனந்தபுரம் வந்தனர். அவர்களை கேரள அரசு பஸ்கள் கட்டணம் ஏதுமின்றி களியக்காவிளைக்கு அழைத்து வந்து சோதனை சாவடி அருகே இறக்கி விட்டுவிட்டு சென்றன.

களியக்காவிளை சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனைக்காக சுமார் 100 பேர் இரவு முழுவதும் உணவு எதுவும் இன்றி காத்திருந்தனர். நேற்று காலையில் கன்னியாகுமரியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்காக 3 தமிழக அரசு பஸ்கள் சென்றன. கொரோனா பரிசோதனைக்கு பின்பு அனைவரும் பஸ்களில் ஏறினர். அப்போது, வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் ரூ.60 வீதம் கட்டணம் வசூலித்தனர்.

அப்போது, ஒரு பஸ்சில் இருந்தவர்கள் கேரள அரசு பஸ்களில் இலவசமாக அழைத்து வந்தனர். சொந்த மாநில மக்களை அழைத்து செல்ல கட்டணம் வசூலிப்பதுடன், தண்ணீர் உணவு எதுவும் தரவில்லை என கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களில் கர்ப்பிணி ஒருவரும் போதிய உணவு கிடைக்காமல் தவித்தார்.

அவர்களிடம், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் போக்குவரத்து நிர்வாகம் சொல்வதைதான் நாங்கள் செய்கிறோம் எனக்கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை பெற்று கொண்டனர். அதன்பின்பு அவர்கள் தனிமை படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News