செய்திகள்
தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு

Published On 2020-06-24 13:44 GMT   |   Update On 2020-06-24 13:44 GMT
தேனி மாவட்டத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் தேனி, கம்பம் உள்பட 5 நகராட்சிகளில் மாலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தேனி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தேனி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். அப்போது, தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க இன்று மாலை 6 மணியில் இருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மறு உத்தரவு வரும்வரை இந்த நடவடிக்கை தொடரும். அதன்படி முழு ஊரடங்கு காலத்தில் இந்த நகராட்சிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வர வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் டீக்கடைகள், பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை, பெட்டிக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடை, டி.வி., செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்ப்பு கடைகள், சாலையோர உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள், காலணி, எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி இல்லை.

ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் வழங்க அனுமதி. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள் செயல்பட எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆட்டோ, கார், தனியார் வாகனங்கள் மருத்துவ அவசர காரணங்களுக்கு மட்டும் இயக்கப்பட வேண்டும். மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத அலுவலர்களுடன் இயங்கலாம்.

மளிகை பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பனை மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி. கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் கட்டுமானப் பணிகள் நடக்கலாம். தொழிற்சாலைகள் இயங்கலாம்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்க வரும் மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தாலோ, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படும். மதுரை மாவட்டத்துக்கு பஸ்கள் இயக்கப்படமாட்டாது. பழனி, திண்டுக்கல்லுக்கு தற்போது இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீதம் மட்டும் இயக்கப்படும்.

Tags:    

Similar News