செய்திகள்
கவுசல்யா தாயார் அன்னலட்சுமி

என் நீண்டகால வேண்டுதலுக்கு பலன் கிடைத்து விட்டது- கவுசல்யாவின் தாய் உருக்கம்

Published On 2020-06-23 07:42 GMT   |   Update On 2020-06-23 07:42 GMT
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியை விடுதலை செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவு தனது நீண்டகால வேண்டுதலுக்கு கிடைத்த பலன் என்று கவுசல்யாவின் தாய் உருக்கமாக தெரிவித்தார்.
பழனி:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொழுமத்தை சேர்ந்த சங்கர் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்துக்கு கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி உடுமலைப்பேட்டை பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சங்கரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் குடும்பத்தினர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் தூக்கு தண்டனை கைதிகள் சார்பில் திருப்பூர் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன் அவரை விடுதலை செய்து ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமியிடம் கேட்ட போது, “ஐகோர்ட்டு தீர்ப்பு மனதார வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு ஆகும். இந்த தீர்ப்பு எனது நீண்ட கால வேண்டுதலுக்கு கிடைத்த பலன். எனது கணவர் என்னிடமே மீண்டும் திரும்பி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் ஆயுள் தண்டனை பெற்ற 5 பேரும் விரைவில் விடுதலையாகி வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்” என்றார். 
Tags:    

Similar News