செய்திகள்
பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

Published On 2020-05-23 10:31 GMT   |   Update On 2020-05-23 10:31 GMT
குமரி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.75 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு அணை பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் மழை பெய்தது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 52 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதையாறு, வள்ளியாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அருவியில் குளிப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அருவியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து நேற்றிரவு அதிகரித்தது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.75 அடியாக இருந்தது.

அணைக்கு 841 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 33.60 அடியாக உள்ளது. அணைக்கு 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 10.76 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.36 அடியாக வும் உள்ளது. குமரி மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. அணைகளின் நீர்மட்டமும் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News