செய்திகள்
ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

Published On 2020-04-28 10:10 GMT   |   Update On 2020-04-28 10:10 GMT
ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி, பிடிக்க சென்ற போலீசாரை கட்டிப்பிடித்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்புடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 45 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ஒன்றில் பணிபுரிந்து வந்த அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு ஆஸ்பத்திரி ஊழியர்கள் இரவு உணவை வழங்குவதற்காக அவரது வார்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு இல்லை. தப்பிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இருந்தார். உடனடியாக அவரை பிடித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

உடனே வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று ஒளிந்து கொண்ட அந்த நபரை பிடிக்க போலீசாரும் மொட்டை மாடிக்கு சென்றனர். அப்போது அவர் போலீசாரை பார்த்து அருகில் வந்தால் உங்களை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து போலீசார் கொரோனா நோயாளியை பத்திரமாக மீட்டு மீண்டும் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிலேயே சேர்த்தனர்.
Tags:    

Similar News