செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் தாயார் மரணம்

Published On 2020-04-24 09:06 GMT   |   Update On 2020-04-24 09:06 GMT
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை:

மதுரை மேலமாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோவில் பட்டரின் 70 வயது தாயார் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ குழுவினர் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடல் தத்தனேரி மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் நபராக மதுரை மேலமடையை சேர்ந்த காண்டிராக்டர் பலியானார். அர்ச்சகரின் தாயார் பலியை தொடர்ந்து மதுரையில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகர்களாக 109 பேர் உள்ளனர். கோவில் நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளிலும் 500 பேர் பணிபுரிகிறார்கள்.

கொரோனா தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பூஜை நடத்துவதற்காக சுழற்சி முறையில் 6 அர்ச்சர்களும், அத்தியாவசிய பணிகளுக்காக 30 பணியாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அர்ச்சகரின் தாயார் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

அம்மன் சன்னதி அருகே மதுரை மாநகராட்சியின் நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் நிறுத்தப்பட்டு அர்ச்சகர்கள், பணியாளர்கள், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அர்ச்சகரின் தாயார் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News