செய்திகள்
கோப்புபடம்

தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதால் கைதானோர் எண்ணிக்கை 33 ஆயிரமாக உயர்வு

Published On 2020-04-01 03:02 GMT   |   Update On 2020-04-01 03:02 GMT
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக, கைது எண்ணிக்கை 33 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

தடை உத்தரவை மீறி வாகனங்களில் வெளியில் சுற்று பவர்களை போலீசார் பிடித்து, வழக்கு போடுகிறார்கள். கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து, நேற்று பகல் 12 மணிவரை தமிழகம் முழுவதும் இதுதொடர்பாக 33 ஆயிரத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 ஆயிரத்து 691 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ரூ.14 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 28 ஆயிரத்து 897 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், நேற்று காலை 6 மணிவரை மட்டும், தடையை மீறிய குற்றத்திற்காக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆட்டோக்கள் உள்பட 199 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சென்னையில் 166 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Tags:    

Similar News