செய்திகள்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக குழித்துறையில் மூடப்பட்டுள்ள லெட்சுமி தியேட்டர்.

கொரோனா முன்எச்சரிக்கை- குமரி மாவட்டத்தில் 6 தியேட்டர்கள் மூடல்

Published On 2020-03-16 04:27 GMT   |   Update On 2020-03-16 04:27 GMT
பொதுமக்கள், பொது இடங்களில் அதிக அளவில் அடுத்த 15 நாட்களுக்கு கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குமரி மாவட்டத்தில் உள்ள 6 தியேட்டர்கள் இன்று முதல் 31-ந் தேதி வரை மூடப்படுகின்றன.
நாகர்கோவில்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோ வைரசின் பாதிப்பு அதிகம் உள்ளதால் எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்டத்தில் மொத்தம் 6 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மார்த்தாண்டத்தில் ஆனந்த், குழித்துறையில் லட்சுமி, பனச்சமூடு யமுனா ஆகிய 3 தியேட்டர்கள் இன்று முதல் 31-ந் தேதி வரை மூடப்படுகின்றன.

நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள வணிகவளாகமும் மூடப்பட்டுள்ளது. அந்த வணிக வளாகத்தில் 3 தியேட்டர்கள் செயல்படுகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் 6 தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

இதேபோல எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் கற்பிக்கப்படும் மழலையர் பள்ளிகளும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகள் வரை செயல்படும் தொடக்கப்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டன. தேர்வுகளும் நடந்தது.

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களில் இருந்து பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அவற்றுள் இந்த ரைவஸ் மக்களிடையே தடுக்கும் பொருட்டு மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக திரையரங்குகளை வருகிற 31-ந்தேதி வரை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பொதுமக்கள், பொது இடங்களில் அதிக அளவில் அடுத்த 15 நாட்களுக்கு கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குமரி மாவட்டத்தில் உள்ள எல்லையோர வட்டமான விளவங்கோடு வட்டத்தில் உள்ள திரையங்குகளான மார்த்தாண்டம் ஆனந்த் திரையங்கம், குழித்துறை லெட்சுமி திரையரங்கம் மற்றும் பனச்சமூடு யமுனா திரையங்கம் ஆகிய திரையரங்குகளை வருகிற 31-ந்தேதி வரை மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News