செய்திகள்
பொதுமக்கள்

ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு- பொதுமக்கள் கருத்து

Published On 2020-03-13 02:55 GMT   |   Update On 2020-03-13 02:55 GMT
கட்சிக்கும் ஆட்சிக்கும் தனித்தனி தலைமை என நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை:

அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற 25 ஆண்டு கால கேள்விக்கு ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று பதில் அளித்தார்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து, ‘போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்’ என்று ரஜினிகாந்த் கூறினார். கட்சி அறிவிப்பு எப்போது வெளி வரும்? கொடி என்ன நிறத்தில் இருக்கும்? மாநாடு எந்த ஊரில் நடக்கும்? என்று ரசிகர்கள் மனக்கணக்கு போட்டு வந்தனர்.

இந்தநிலையில் ரஜினிகாந்த், ‘தனக்கு முதல்-அமைச்சர் பதவியில் ஆசை இல்லை. கட்சிக்கு தலைமை ஏற்பேன். முதல்-அமைச்சராக வர மாட்டேன்’ என்றும் கட்சிக்கும் ஆட்சிக்கும் தனித்தனி தலைமை என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார்.

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் ரஜினிகாந்தின் ஆதரவாளர்கள் அவர் முதல்-அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என்பது ஏமாற்றம் அளிப்பதாகவும், அதேநேரத்தில் நடுநிலையாளர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

பொது மக்கள் அளித்த பதில்கள் வருமாறு:-

திருவொற்றியூரை சேர்ந்த பஸ் கண்டக்டர் பாலகிருஷ்ணன்:-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினிகாந்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவர் எப்போது அரசியலுக்கு வருவார்? என்று காத்திருந்த போது, ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அவர் 2017-ம் ஆண்டு கூறிய வார்த்தையை பெரும்பாலானோர் வரவேற்றனர்.

ஆனால் தற்போது அவர் முதல்-அமைச்சர் பதவியில் எனக்கு நாட்டம் இல்லை என்று கூறி இருப்பது மிகுந்த ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



அயனாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி புனிதா:-

ரஜினிகாந்த் என்ற ஒரு சொல்லுக்கு தான் அவரது ரசிகர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். முதல்-அமைச்சராக அவர் தான் வர வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அந்த இடத்தில் வேறு ஒருவரை எப்படி நினைத்து பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த் தன்னுடைய வயது, உடல்நலம் மற்றும் தற்போதைய அரசியல் சூழலை எண்ணி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் இவ்வளவு ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் பதவியை வேண்டாம் என்று சொல்லி இருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.

சென்னை கொளத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர் கோவிந்தராஜூ:-

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை சுய லாபத்துக்காக பயன்படுத்த மாட்டார். தன்னை வாழ வைத்த தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவே பயன்படுத்துவார் என்பது அவருடைய பேட்டி மூலம் தெளிவாகி உள்ளது.

ரஜினிகாந்த் என்ற புகழ் வெளிச்சத்தில் எம்.எல்.ஏ.வாகி பணம் சம்பாதித்து பிரகாசித்து விடலாம் என்று எண்ணியவர்களுக்கு அவருடைய நிலைப்பாடு தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அவருடைய முடிவை நடுநிலையாளர்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் ராமுமணிவண்ணன்:-

ரஜினிகாந்தின் சொல்லுக்கும், செயலுக்கும் மிகப்பெரிய இடைவெளி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அரசியல் ரீதியாக தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்பும் தகுதி இவருக்கு கிடையாது. கட்சியை அறிவிக்காமலேயே கட்சிக்கு தலைமையாக இருக்க போகிறேன் என்று சொல்லி காலம் கடத்தி வருகிறார். அவர் மக்களை குழப்புவதில் தெளிவாக இருக்கிறார். ஆனால் அவர் தெளிவாக உள்ளார். மக்கள் அரசியலுக்கு அவரை வரவேண்டாம் என்று சொல்லவில்லையே?. பிறகு ஏன் அவர் வர மறுக்கிறார்?. ஒரு முரண்பாடான அரசியலுக்கு இவர் முன்னிறுத்தப்படுகிறார். களத்தில் நின்று பணி செய்யுங்கள். பிறகு என்ன செய்யப்போகிறேன் என்று அவர் சொல்லலாம்.

தனியார் மருத்துவமனை மருத்துவ உதவியாளர் மீனாட்சி:-

எனக்கு சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும். என்னுடைய தந்தையும் அவருடைய தீவிர ரசிகர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். அவர் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார். கட்சிக்கு தலைமையாக இருப்பேன் என்று அவர் சொல்லி இருப்பதை நான் வரவேற்கிறேன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களுக்கு, அதிலும் குறிப்பாக பெண்களுக்கும் வாய்ப்பு அளிப்பேன் என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அவர் விரைவில் கட்சி தொடங்கி, அரசியலில் ஒரு மாற்றத்தை நிகழ்த்துவார்.

தனியார் கம்பெனி ஊழியர் பி.லிங்கத்துரை:-

ரஜினிகாந்த் படங்களை நான் சிறு வயதில் இருந்தே விரும்பி பார்ப்பேன். இதனால் அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, தீவிர ரசிகர் ஆனேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு, தனக்கு முதல்-அமைச்சர் ஆவதற்கு விருப்பம் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் முதல்-அமைச்சர் ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதனால் அவருடைய அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இல்லத்தரசி மகாலட்சுமி:-

நான் பள்ளி படிப்பு படிக்கும்போது இருந்தே ரஜினிகாந்த் ரசிகையாக இருக்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் கட்சிக்கு தலைமை வகிப்பேன் என்றும், முதல்-அமைச்சர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றம். இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கும் ரஜினிகாந்த் தியாகத்தால் உயர்ந்து நிற்கிறார். முதல்-அமைச்சராக ரஜினிகாந்த் இருந்தால் ஏராளமான நல்ல திட்டங்களை செயல்படுத்துவார். கட்சிக்கு அவர் தலைமை வகித்தாலும் நல்லதே செய்வார். அவர் ஒரு போதும் யாருக்கும் கெடுதல் நினைக்கமாட்டார். ரஜினிகாந்த் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

மீன் வியாபாரி ஞானராஜ்:-

தமிழக மக்கள் மீது ரஜினிகாந்துக்கு எந்த அக்கறையும் இல்லை. தமிழக மக்களை குழப்புவதிலேயே அவர் குறியாக இருக்கிறார். எதையும் தெளிவாக சொல்லுவது இல்லை. முதல்-அமைச்சர் ஆவதற்கு ஆசை இல்லை என்று சொல்கிறார். ஆனால் நிஜமாகவே தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. 70 வயதுக்கு பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் நடித்ததோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். திரைப்படங்களில் மக்களை ரசிக்க வைத்தவர்கள் எல்லோரும், அரசியலில் மக்கள் வாக்குகளை வெல்வது இல்லை.


Tags:    

Similar News