செய்திகள்
தலைமுடியில் கயிறு கட்டி காரை இழுத்த யோகா ஆசிரியை.

மகளிர் தினம்: தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்து யோகா ஆசிரியை

Published On 2020-03-08 12:58 GMT   |   Update On 2020-03-08 12:58 GMT
திருவண்ணாமலையில் மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் யோகா ஆசிரியை தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். இதில் யோகா ஆசிரியை கல்பனா (வயது 30) என்பவர் தனது தலை முடியின் மூலம் காரை இழுத்து சாதனை செய்தார். இவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இருந்து காரை இழுத்தார். கயிற்றின் ஒரு முனை காரிலும் மற்றொரு முனை கல்பனாவில் தலை முடியிலும் கட்டப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை டவுன் டி.எஸ்.பி. அண்ணாதுரை தொடங்கி வைத்தார். கல்பனா சுமார் 200 மீட்டருக்கு மேல் காரை இழுத்து சாதனை படைத்தார். பொதுமக்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அவருக்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து யோகா ஆசிரியை கல்பனா கூறியதாவது:-

நான் யோகா ஆசிரியையாக இருக்கிறேன். சிலம்பம், வில்வித்தை ஆகியவற்றை கற்று கொடுத்து வருகிறேன். அண்ணாமலையார் அருளால் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனது தலை முடியில் கயிறு கட்டி காரை இழுத்துள்ளேன்.

இதற்கு எனது பெற்றோரும், எனது பயிற்சி ஆசிரியர் சுரேஷ்குமாரும் அளித்த ஊக்கமும் தான் காரணம். இனி வரும் காலங்களில் இதைவிட பெரிய சாதனை நிகழ்த்த உள்ளேன். ஒவ்வொரு பெண்களிடமும் ஒரு திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை பெண்கள் தைரியமாக வெளிக்கொண்டு வரவேண்டும். என்றார்.

மாவட்ட சமூக நலத் துறையின் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, விக்னேஷ் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த சவித்தா சாய்ராம், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகத்தை சேர்ந்த சுரேஷ்குமார், யோகா பயிற்சியாளர்கள் நித்யா, நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News