செய்திகள்
அதிகாரிகள் மீன்களின் தரத்தை பரிசோதித்த காட்சி

கரிமேடு மார்க்கெட்டில் 1 டன் மீன்கள் பறிமுதல்- ரசாயனங்களை பயன்படுத்தியதால் நடவடிக்கை

Published On 2020-02-29 03:40 GMT   |   Update On 2020-02-29 03:40 GMT
மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயன பொருட்கள் செலுத்தப்பட்ட 1 டன்னுக்கும் அதிகமான மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை:

மதுரை நகரில் கரிமேடு மீன் மார்க்கெட் பிரபலமானது. பல்வேறு ஊர்களில் இருந்து அங்கு மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. ஏராளமான கடைகளில் அங்கு டன் கணக்கில் மீன் விற்பனை நடந்து வருகிறது.

மதுரை நகரவாசிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார ஊர்களை சேர்ந்த மக்கள் அங்கு குவிந்து மீன் வாங்குவார்கள். எனவே இரவிலும், காலையிலும் அந்த மீன் மார்க்கெட் பரபரப்பாகவே காணப்படும்.

கரிமேடு மார்க்கெட்டில் பல கடைகளில் விற்கப்படும் மீன்கள் சுகாதாரம் இன்றி இருப்பதாகவும், மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல விதமான ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதாகவும், அங்கு மீன்கள் வாங்கி சாப்பிடுவோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் மதுரை உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரி சோம சுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆய்வக பணியாளர்களும் வந்திருந்தனர்.

ஒவ்வொரு கடையாக சென்று விற்பனைக்கு இருந்த மீன்களை எடுத்து ஆய்வக பணியாளர்கள் உதவியுடன் அங்கேயே பரிசோதனை செய்தனர். இதில் பல கடைகளில் வைத்திருந்த மீன்களுக்கு ரசாயன பொருட்கள் செலுத்தப்பட்டு இருந்தது தெரியவந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே அந்தந்த கடைகளில் இருந்த மீன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. மேலும் கடைக்காரர்களிடம் தீவிர விசாரணை மறுபுறம் நடந்தது.

நேற்று இரவு நடந்த இந்த திடீர் சோதனையில் கரிமேடு மார்க்கெட்டில் மட்டும் ஒரு டன்னுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தையும் பாதுகாப்பு துறை அலுவலர்கள் பத்திரமாக எடுத்துச் சென்று அழித்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் கூறும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் இனி தொடர்ந்து நடைபெறும். மேலும் ரசாயனம் கலக்காத மீன்களை வாங்கி விற்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கலப்படம் செய்த வியாபாரிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்திருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும். கடைகளில் நடத்தப்பட்டது போல் மீன்களை ஏற்றி வரும் லாரிகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றார்.

Tags:    

Similar News