செய்திகள்
கோப்பு படம்

குழந்தை திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-02-22 12:23 GMT   |   Update On 2020-02-22 12:23 GMT
திருவண்ணாமலையில் குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் மீது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் செ.ஆண்டாபட்டு கிராமத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும். இதனால் பெண் கல்வி தடைபட்டு உடல் நலன் குறைந்து சமுதாயத்தில் அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு இல்லா நிலை ஏற்படுகிறது. இது பெண் குழந்தைகளுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

எவரேனும் 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கோ, 21 வயது பூர்த்தி அடையாத ஆணுக்கோ திருமணம் செய்தாலோ அல்லது திருமணம் ஏற்பாட்டில் பங்கு பெற்றாலோ குற்றமாகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் யாராவது திருமணமோ அல்லது திருமண ஏற்பாடு செய்தாலோ குழந்தைகளுக்கான இலவச உதவி எண் 1098, பெண்களுக்கான இலவச உதவி எண் 181 மற்றும் 04175-238181, மாவட்ட சமூக நல அலுவலகம் 04715 233810 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்த ரகசியம் காக்கப்படும்.

இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News