search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கலெக்டர்"

    போளூர் அருகே ஏழை மாணவியின் கட்டாய திருமணத்தை நிறுத்தி நர்சிங் படிக்க திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உதவினார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த வித்யா (வயது 17) என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், ‘‘எனக்கு 18 வயது நிரம்பவில்லை. ஆனால் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அதில் விருப்பம் இல்லை. எனவே திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

    அந்த மனு மீது கலெக்டர் விசாரணை நடத்தினார். வித்யா 5 வயதான போதே அவரது தந்தை இறந்து விட்டார், அவரது தாயார் விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வருகிறார். மாணவி வித்யா மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து படிக்க வைக்காமல் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து மாணவி வித்யாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரது தாயாரையும் கலெக்டர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்தினார். அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். வித்யா உயர்கல்வி படிக்க ஆசை உள்ளதாக கலெக்டரிடம் தெரிவித்தார்.

    தனியார் நிறுவன நிதியுதவியுடன் மாணவி வித்யாவை வந்தவாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க ஏற்பாடு செய்தார்.

    வித்யா 4 ஆண்டிற்கும் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கான மொத்த தொகை ரூ.3 லட்சம் தனியார் நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் வந்தவாசியை சேர்ந்த கல்லூரி நிர்வாகிகளிடம் கலெக்டர் கந்தசாமி, மாணவி முன்னிலையில் வழங்கினார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலையில் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கந்தசாமி உதவி செய்தார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நீலவேணி என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

    அதில் தான் அரசுப்பள்ளியில் படித்து மேல்நிலை பொதுத்தேர்வில் 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தன்னுடைய அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்துதான் என்னை படிக்க வைத்தனர். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.

    தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தான் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் எனவும், தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    அப்போது, மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் விவசாய கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீலவேணி உள்பட 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.

    குடும்ப வறுமை காரணமாக நீலவேணி கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலையினை கூறி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவியின் வறுமை நிலையினை விளக்கி பரிந்துரை கடிதத்தினையும் அளித்தார்.

    இந்த நிலையில் மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது தாயாருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் நீலவேணிக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  #Tiruvannamalaicollector
    பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த 19 வயது இளம் பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார். #TiruvannamalaiCollector
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா. சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2014-ம் ஆண்டு இறந்து விட்டார்.

    இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி (வயது 19), அபி (17) மற்றும் மகன் மோகன் (16) ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து ஆனந்தி கடந்த மாதம் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் ‘‘தனது தாயார் பணிக்காலத்தில் இறந்து விட்டார். அதன்பின் பாட்டியின் பராமரிப்பில் தங்கை, தம்பியுடன் வசித்து வருகிறேன். அவர்களை காப்பாற்றுவதற்காக நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனவே கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். பிளஸ்-2 முடித்த ஆனந்தி கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி பாட்டி ராணியும் இறந்து விட்டதால் திக்கற்ற நிலையில் தவித்த ஆனந்தி கலெக்டரை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘‘19 வயதுள்ளவருக்கு அரசுப் பணி வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை, எனினும் தமிழக அரசு தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார். நேற்று கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தன்னிடம் மனு அளித்த ஆனந்தியின் வீட்டிற்கே நேரடியாக சென்றார்.

    அப்போது ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பி ஆகியோரின் படிப்பு குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் அவரது வீட்டிலேயே மதிய உணவை சாப்பிட்ட கலெக்டர், ஆனந்தியிடம் ‘‘உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்க வந்துள்ளேன்’’ என்றார். தொடர்ந்து பணி உத்தரவினை ஆனந்தியிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்துப் பெற்றார். #TiruvannamalaiCollector
    ×