search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "collector kandasamy"

  கல்வியோடு திறமையும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி பேசினார்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

  கருத்தரங்கை கலெக்டர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:–

  வாழ்க்கை சவால் நிறைந்தது. போட்டி நிறைந்த இவ்வுலகில் சிரமங்களைத் தாண்டி சாதனைகள் புரிந்திட வேண்டும். வாழ்வில் உயர கடின உழைப்பு தேவையில்லை, அறிவுப்பூர்வமான உழைப்புதான் தேவை. காலத்தால் அழிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே. கல்வியோடு திறமையும் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். உன்னை நீ இவ்வுலகிற்கு அடையாளம் காட்ட வேண்டிய தருணம் இது. போட்டி நிறைந்த இவ்வுலகில் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற வேண்டும்.

  வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்று உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காகவே இம்மாதிரியான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

  மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் கலந்துகொண்டு நீங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதில் சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குனர் மீனாட்சி, துணை இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை, சன் கலை மற்றும் அறிவியில் கல்லூரி செயலாளர் எஸ்.சீனுவாசன், முதல்வர் சிவக்குமார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
  போளூர் அருகே ஏழை மாணவியின் கட்டாய திருமணத்தை நிறுத்தி நர்சிங் படிக்க திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உதவினார். #Tiruvannamalaicollector
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த வித்யா (வயது 17) என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் மனு ஒன்றை அளித்தார்.

  அதில், ‘‘எனக்கு 18 வயது நிரம்பவில்லை. ஆனால் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அதில் விருப்பம் இல்லை. எனவே திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

  அந்த மனு மீது கலெக்டர் விசாரணை நடத்தினார். வித்யா 5 வயதான போதே அவரது தந்தை இறந்து விட்டார், அவரது தாயார் விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வருகிறார். மாணவி வித்யா மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து படிக்க வைக்காமல் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிய வந்தது.

  அதைத்தொடர்ந்து மாணவி வித்யாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரது தாயாரையும் கலெக்டர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்தினார். அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். வித்யா உயர்கல்வி படிக்க ஆசை உள்ளதாக கலெக்டரிடம் தெரிவித்தார்.

  தனியார் நிறுவன நிதியுதவியுடன் மாணவி வித்யாவை வந்தவாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க ஏற்பாடு செய்தார்.

  வித்யா 4 ஆண்டிற்கும் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கான மொத்த தொகை ரூ.3 லட்சம் தனியார் நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் வந்தவாசியை சேர்ந்த கல்லூரி நிர்வாகிகளிடம் கலெக்டர் கந்தசாமி, மாணவி முன்னிலையில் வழங்கினார். #Tiruvannamalaicollector
  திருவண்ணாமலையில் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கந்தசாமி உதவி செய்தார். #Tiruvannamalaicollector
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நீலவேணி என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

  அதில் தான் அரசுப்பள்ளியில் படித்து மேல்நிலை பொதுத்தேர்வில் 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தன்னுடைய அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்துதான் என்னை படிக்க வைத்தனர். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.

  தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தான் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் எனவும், தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

  அப்போது, மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

  அதன்படி கடந்த 6-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் விவசாய கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீலவேணி உள்பட 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.

  குடும்ப வறுமை காரணமாக நீலவேணி கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலையினை கூறி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவியின் வறுமை நிலையினை விளக்கி பரிந்துரை கடிதத்தினையும் அளித்தார்.

  இந்த நிலையில் மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது தாயாருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் நீலவேணிக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  #Tiruvannamalaicollector
  திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்களிடம் கலெக்டர் கருத்துகளை கேட்டறிந்தார்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று தியாகி அண்ணாமலை பிள்ளை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

  திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் 13.76 ஏக்கர் நிலம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் 9.38 ஏக்கர் நிலம், ரெயில் நிலையம் அருகில் 8.32 ஏக்கர் நிலம், துரிஞ்சாபுரத்தில் 13.39 ஏக்கர் நிலம், கண்ணதம்பூண்டி கிராமத்தில் 26.36 ஏக்கர் நிலம் ஆகிய 5 இடங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  அதன் அடிப்படையில் பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த 5 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, தங்கும் வசதி, இணைப்பு சாலைகள், உள்ளூர், வெளியூர் பயணிகள் எந்த நேரமும் வருவதற்கான சூழ்நிலை, மோட்டார் சைக்கிள் வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வந்து செல்வதற்கான வசதிகள், பிற்காலத்தில் எந்தவித இடர்பாடுகள் ஏற்படாத வகையிலான அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  திருவண்ணாமலை நகராட்சியில் தற்போதுள்ள மத்திய பஸ் நிலையத்தில் 50 பஸ்கள் நிறுத்த வசதிகள் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நிலவரப்படி பஸ் நிலையத்திற்கு தினமும் 585 பஸ்கள், 1,780 நடைகள் இயக்கப்பட்டது. தற்போது தினமும் 670 பஸ்கள், 1,913 நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.

  இதன் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் 12 சதவீதம் பஸ்கள், 8 சதவீதம் நடைகள் அதிகரித்து உள்ளது. புதிய பஸ் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 இடங்களிலும் 150 பஸ்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 23 ஆண்டு களுக்கு போதுமானதாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் இந்த 5 இடங்களில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

  கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

  ×