செய்திகள்
செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.30 லட்சம் மோசடி புகார்

Published On 2020-02-18 06:44 GMT   |   Update On 2020-02-18 06:44 GMT
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் சபாபதி. இவர் கோவை கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரர் அருள்ராஜ் என்பவர் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் தொழிற்சங்கத்திலும் பொறுப்பு வகித்து வந்தார்.

அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்த உத்திரவாதத்தின் அடிப்படையில் எனது சகோதரர் அருள்ராஜ் பலரிடம் ரூ. 30 லட்சத்துக்கும் மேலாக பணம் வசூலித்து செந்தில் பாலாஜியிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 5-ந் தேதி எனது சகோதரர் அருள்ராஜ் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் எனது சகோதரரிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் என்னையும், எனது அண்ணி குடும்பத்தாரையும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். இது குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தார்கள். எங்களை போலீசார் அழைத்து விசாரித்தார்கள். அதற்கு நாங்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றே பதில் அளித்தோம்.

எனவே எனது சகோதரரை ஏமாற்றி மோசடி செய்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
Tags:    

Similar News