செய்திகள்
போராட்டம்

சென்னை தடியடியை கண்டித்து மதுரையில் 4-வது நாளாக போராட்டம் நீடிப்பு

Published On 2020-02-17 04:29 GMT   |   Update On 2020-02-17 04:29 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து மகபூப்பாளையத்தில் 14-ந்தேதி தொடங்கிய போராட்டம் 4-வது நாளாக இன்று நீடிக்கிறது.
மதுரை:

சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 14-ந்தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகபூப்பாளையத்தில் 14-ந்தேதி தொடங்கிய போராட்டம் 4-வது நாளாக இன்று நீடிக்கிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமி‌ஷனர் கார்த்திக் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மகபூப்பாளையம் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒரு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

எனவே போலீசார் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகபூப்பாளையம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். சமரசம் எதுவும் ஏற்படவில்லை.

போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் போராட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக கூடுதல் போலீஸ் ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங்கை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவர் மதுரையில் முகாமிட்டுள்ளார்.

மகபூப்பாளையம் போராட்ட குழுவினருடன் அபய்குமார் சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் முஸ்லிம்களின் போராட்டம் தீவிரமாகும் நிலையில் எண்ணற்ற இஸ்லாமிய அமைப்புகள் இன்று நெல்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இதனால் மதுரையில் பரபரப்பு- பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News