செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையம்

30 மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் நவீன கழிப்பறை வசதி

Published On 2020-02-14 09:23 GMT   |   Update On 2020-02-14 09:23 GMT
மெட்ரோ ரெயில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் 30 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் இ-டாய்லெட் எனப்படும் நவீன கழிப்பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினமும் சராசரியாக 96 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக பல்வேறு சேவைகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் இ-டாய்லெட் எனப்படும் நவீன கழிப் பறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 30 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் இந்த இ-டாய்லெட்டுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன கழிப்பறை அமைக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து ஈடுபட உள்ளன. சமீபத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் வளாகத்தில் இ-டாய்லெட்டை ஏற்படுத்த சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் அனுமதி அளித்தது.

குறிப்பாக சுரங்க ரெயில் நிலையங்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலான எண்ணிக்கையில் இ-டாய்லெட் வசதியை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த கழிவறைகள் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பயன்படும்.

இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் அமைக்கப்படும் இ-டாய்லெட்டுகள் பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணிகள் இயற்கை உபாதைக்காக எப்போதும் ரெயில் நிலையங்களுக்குள் நுழைய தேவையில்லை. அவர்கள் ரெயில் நிலையத்தின் வெளியேயும் கழிவறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இ-டாய்லெட் அமைக்கும் பணியை செயல்படுத்தவும், பராமரிக்கவும் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சென்னை நகரில் பெண்களுக்காக 84 கழிவறைகள் உள்பட 155 கழிவறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளன. நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்காக 150 கழிவறைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளன.

சென்னையில் தற்போது 872 வழக்கமான கழிவறைகள், 221 இ-டாய்லெட்டுகள், 138 வாடகை கழிவறைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News