செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா-மருத்துவ கல்லூரி

Published On 2020-02-07 08:23 GMT   |   Update On 2020-02-07 08:23 GMT
சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அடிக்கல் நாட்டுகிறார்.

அங்கு நடைபெறும் விவசாய பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கையும் துவக்கி வைக்கிறார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

விழாவிற்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். தலைமைச் செயலாளர் சண்முகம், வரவேற்று பேசுகிறார்.

விழாவில் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, விவசாய பெருவிழா குறித்து விளக்கமாக பேசுகிறார். மருத்துவர் கோபால், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், பேசுகிறார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.

10,11-ந்தேதிகளில் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கால்நடை கல்லூரிகளில் சேருவது தொடர்பாகவும், விளக்கம் கொடுக்கிறார்கள்.
வேளாண் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களும் வருகை தந்து வழிகாட்ட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 20,000 மாணவ-மாணவிகள் வருகை தர உள்ளனர்.

கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்து கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது.

விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் கால்நடை வளர்ப்பு செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவற்றையும் அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்தும், நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது.

இதற்காக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி அரங்கில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நவீன எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற உள்ளன.

3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் மூலமாக சுமார் 3 லட்சம் பொதுமக்கள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

எனவே தலைவாசலில் 9, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News