செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழி பெயர்க்க கோரி வழக்கு

Published On 2020-02-04 09:46 GMT   |   Update On 2020-02-04 09:46 GMT
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கின் போது உச்சரிக்கப்படும் சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழி பெயர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை:

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கின் போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

மந்திரங்களை தமிழில் சொல்லும் போது தான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களை தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி திருவள்ளூரை சேர்ந்த மணிகாணந்தா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறநிலையத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது என்றும் அரசு வக்கீல் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளதா? எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, இது பொதுநல வழக்கு போல் உள்ளதால், பொதுநல வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைப்பாக தெரிவித்தார்.
Tags:    

Similar News