செய்திகள்
விவசாய தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை ஆண் யானை.

விவசாய தோட்டத்தில் நுழைந்த ஒற்றை ஆண் யானை

Published On 2020-02-04 05:58 GMT   |   Update On 2020-02-04 05:58 GMT
தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த ஒற்றை ஆண் யானையை பார்த்து பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மலை அடிவார பகுதிகளில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது.

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை தொண்டாமுத்தூர் நரசீபுரம் ஓடை காட்டில் உள்ள ஆறுச்சாமி என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. பின்னர் அந்த யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்து 50 வாழைமரங்களை தின்று நாசம் செய்தது. தொடர்ந்து அந்த யானை தோட்டத்தில் இருந்த 4 தென்னை மரங்களை பிடுங்கி வீசி தின்றது. பின்னர் அங்கே விடியும் வரை நின்று கொண்டு இருந்தது.

அதிகாலை அந்த வழியாக வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் யானை தோட்டத்தில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தோட்டத்தில் முகாமிட்டு இருந்த யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

இந்த ஆண் யானை கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் முகாமிட்டுள்ளது. இரவானதும் மலையில் இருந்து இறங்கி வரும் இந்த யானை மலைஅடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. எனவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News